September 2010
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Recent Comments
    Counter




    Archives

    பணச்சலவை – MONEY – LAUNDERING

    பணச்சலவை – MONEY – LAUNDERING

    - DR – நவீன ராஜதந்திரம்


    தீய வழிகளில் பெறப்பட்ட பணத்தை வங்கி போன்றவற்றில் இடுவதன் மூலம் அதைச் சட்டபூர்வமான வழிகளில் பெற்ற பணத்திற்கு நிகரானதாகச் செய்யும் நடைமுறை பணச்சலவை எனப்படும். கறுப்பு பணத்தை வெள்ளை ஆக்குதல் என்று இந்தவகை சலவையைக் குறிப்பிடலாம்.
    போதைவஸ்து விற்பனை, இலஞ்சம், ஆட்கடத்தல், வழிப்பறி, கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல், கள்ள நோட்டு அடித்தல் போன்றவற்றால் பெறப்படும் பணம் பொதுவாக கறுப்பு பணம் எனப்படுகிறது. சர்வதேச நிதி ஒழுங்கமைப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக கறுப்புப் பணம் விளங்குகிறது.
    பணச்சலவைக்கு சில நேர்மையற்ற நாடுகளும் வங்கிகளும் துணைபோகின்றன. இதை தடுப்பதற்கு இராசதந்திர அதிகாரிகளும் சர்வதேச பொலிசாரும் பெரு முயற்சி எடுக்கின்றனர்.

    கறுப்பு பணம் வெள்ளையாக மாறும்போது 4 கட்டங்களை தாண்டிச் செல்கிறது.
    1 . குற்றச் செயலும் அதனால் பெற்ற வருவாயும்.
    2 . வருவாய்ப் பணத்தை வைப்பிலிடுதல்.
    3 . குற்றச் செயலுக்கும் வைப்பிலிட்ட பணத்திற்கும் இடையிலுள்ள நெருங்கிய தொடர்பை மறைத்தல்.
    4 . வைப்பிலிட்ட பணத்தை முதலீடாக மாற்றி அதை நிதி நீரோட்டத்தில் கலத்தல்.

    இன்று சலவையை தடுக்கும் நோக்கில் சில அடிப்படை பாதுகாப்பு விதிமுறைகளை வங்கிகள் உருவாகியுள்ளன.
    கற்பனைப் பெயர் முகவரியுடன் பணத்தை வைப்பிலிடுவதை தடுத்தல் என்பது பாதுகாப்பு விதிமுறைகளில் முதலிடம் பெறுகிறது.
    வைப்பிலிடுபவருடைய அடையாளம் மிகவும் துல்லியமாக ஆய்வு செய்யப்படுகிறது.
    அத்துடன் அவர் வைப்பிலிடும் பணத்தை எப்படிப் பெற்றார்?
    அதற்குரிய ஆவணங்கள் அவரிடம் இருக்கிறதா?
    அவை உண்மையானவைதானா?
    என்பதையும் சம்பந்தப்பட்ட வங்கி உறுதிப்படுத்த வேண்டும்.
    இதற்க்கான விசேட பயிற்சிகள் வங்கி அலுவலகர்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்காவும் பிரித்தானியாவும் பணச் சலவைக்கு எதிரான மிகவும் இறுக்கமான சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துகின்றன.

    அதேபோல இணைந்த ஐரோப்பிய நாடுகளுக்குள் ஒருவர் வெவ்வேறு நாடுகளில் வங்கி கணக்கு வைத்திருப்பதை ஆராய்ந்து கண்டறியும் உரிமை வங்கிகளுக்கு உண்டு. அப்படி கண்டுபிடிக்கப்படின் இடப்பட்ட பணத்தின் தொகை + அது பெறப்பட்ட வழிமுறை + இடப்பட்ட காரணம் போன்ற கேள்விகளுக்கு வெவ்வேறு நாடு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் பதில் கூறியாக வேண்டும்.

    உலகின் அதியுச்ச செல்வந்த நாடுகளான ஜி 7 (GROUP OF SEVEN) 22 ஜூன் 2000 ஆம் ஆண்டில் நிதி நடவடிக்கைக்கான அதிரடிப்படையை (FINACIAL ACTION TASK FORCE) பணச் சலவையை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கியுள்ளது. பணச் சலவையை சர்வதேச மட்டத்தில் ஒழிப்பதற்கு அல்லது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் 15 நாடுகளின் பட்டியலை மேற்கூறிய அதிரடிப்படை வெளியிட்டுள்ளது.

    உலகின் மிகப் பெரிய முதலீட்டு ஆலோசனையும் நிதி உதவியும் வழங்கும் முதலீட்டு வங்கிகளில் ஒன்றான (INVESTMENT BANK) அமெக்காவின் மெரில் லின்ச் (MERRIL LYNCH) வெளியிட்ட அறிக்கையின்படி உலகின் மொத்த கருப்பு பணம் 15 டிரில்லியனாகும். ( 15 TRILLION). கருப்பு பண வைப்பிற்கு உதவும் நாடுகளின் பட்டியலில் ஐரோப்பாவின் மிகச் சிறிய நாடுகளில் ஒன்றான LIECHTENSTEIN (லீச்ஸ்டென்ஸ்டைன்) முதலிடம் வகிக்கிறது. சுவிசின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த நாடு வங்கிகள் நிரம்பிய நாடாக அமைகிறது. இதற்கு எதிராக “பொருளாதாரத்தடைகள்” ஐநாவால் விதிக்கப்படலாம் என்ற பேச்சுக்கள் அடிபடுகின்றன.

    பிரான்சின் பாதுகாப்பில் இயங்கும் சிறு நாடான MONACCO (மொனாக்கோ) 49 வங்கிகளையும் 70 நிதி நிறுவனங்களையும் கொண்டுள்ளது. வரி ஏய்ப்பில் ஈடுபடும் சினிமா நட்சத்திரங்களும் விளையாட்டு வீரர்களும் ஒருதொகைப் பணத்திற்கு இங்கு குடியுரிமை பெறுகின்றனர். இவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஐரோப்பாவின் சூதாட்ட மையங்களில் ஒன்றாக இந்த இடம் பிரசித்தி பெற்றுள்ளது. இங்குள்ள வங்கிகளும் சூதாட்ட நிறுவனங்களும் கருப்பு பணத்தை வெள்ளையாக்க உதவுகின்றன.

    பெயர் குறிப்பிடாமல் சேமிப்பு கணக்குகளை தபாலகங்களில் திறக்கும் வசதியை 2000 ஆம் ஆண்டுவரை அவுஸ்திரியா (AUSTRIA) வழங்கியது. அவுஸ்திரியாவின் மக்கள் தொகையிலும் பார்க்க 3 மடங்கு கூடிய அளவில் தபாலக சேமிப்பு புத்தகங்கள் இங்கு காணப்படுகின்றன. 2000 ஆம் ஆண்டின் கணக்குப்படி சேமிப்பு புத்தகங்களின் எண்ணிக்கை 24 மில்லியன். இப்போது புத்தகங்களை வைத்திருப்போரின் பெயர், அடையாளம், உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் அவுஸ்திரியாவில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அழுத்தங்களை இராசதந்திர மட்டத்தில் ஜி 7 நாடுகள் கொண்டுவந்தன.

    இரகசிய வைப்பிற்கு இலக்கணம் வகுத்த நாடு சுவிட்சலாந்து. படிப்படியாக அதனுடைய நடவடிக்கைகள் இப்போது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுகின்றன. குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்டதாக நிரூபிக்கப்பட்ட வைப்புகள் பற்றிய விபரங்களை சுவிட்சலாந்து வங்கிகள் வெளியிடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    நைஜீரியாவின் முன்னாள் சர்வதிகாரி சானி அபாச்சா 17 சுவிஸ் வங்கிகளில் 500 மில்லியன் டாலரை வைப்பில் இட்டுள்ளார். ஜி 7 நாடுகள் தமது அதிரடிப்படை ஊடாக சுவிட்சர்லாந்தில் நடவடிக்கை எடுக்க தொடங்கியபின் 2000 ஆம் ஆண்டில் மாத்திரம் அபாச்சாவைப் போன்ற 370 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர். சூறையாடப்பட்ட நாடுகளிடம் இப்பணத்தை திருப்பி ஒப்படைப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கிரேக்க இனத்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சைப்பிரஸ் தீவுப்பகுதி ருஷ்ய நாட்டு மாபியா கும்பல்களுக்கு சலுகைகளை வழங்குகின்றது. சகலவிதமான சலவைக்கும் சைப்பிரஸ் வங்கிகள் உதவுகின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் மாபியாக்களும் இத்தீவின் வங்கிச் சேவைகளை பயன்படுத்துகின்றனர். வங்கிகளை கட்டுப்படுத்தும் இறுக்கமான சட்டங்களை இயற்றாமலும், வங்கிகளை தீவிர மேற்பார்வை செய்யாமலும் விடுவதால் இஸ்ரேயில் மறைமுகமாக பணச் சலவையை ஊக்குவிக்கிறது. தனது இலாபமே குறியாக இந்த நாடு செயற்படுகிறது.

    உலகில் மிகவும் வறிய நாடுகளில் ஒன்றான பசுபிக் தீவு, நவுறு (NAURU) 400 வரையிலான வங்கிகளை தனது சின்னஞ்சிறிய நிலப்பரப்புக்குள் இயங்க அனுமதித்துள்ளது. இத்தீவில் வங்கிச் சட்டங்கள் கிடையாது. கருப்பு பணத்தை வெள்ளை ஆக்கும் தொழில் இங்கு அமோகமாக நடைபெறுகின்றது.

    ஜி 7 வெளியுட்டுள்ள பட்டியலில் 15 நாடுகள் இடம்பெறுகின்றன. சில நாடுகளின் விபரங்கள் இதன் மேல் குறிப்பிடப்பட்டுள்ளன. சிறிலங்காவின் பெயர் இதில் அடங்காவிட்டாலும் தெற்கு ஆசியாவின் பணச்சலவை மையமாக அது உருவாவதை அவதானிக்க முடிகிறது. உள்வரும் பண முதலீடுகளின் வரலாற்றை புலனாய்வு செய்யும் திறமையும், கட்டுப்பாட்டு சட்டங்களை உருவாக்கி அமுலாக்கும் வலுவும் சிறிலங்காவிடம் இல்லை.

    கருப்புப்பண சலவையை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் இவை இடம் பெறுகின்றன.
    பகாமாஸ் (BAHAMAS)
    கேமன் தீவுகள் (CAYMAN ISLAND)
    இஸ்ரேல்
    லெபனான்
    லீச்ரென்ஸ்டேய்ன்
    நவுறு
    நியூவே (NIEUE)
    பனாமா
    பிலிப்பீன்
    ரஸ்யா
    மார்ஷல் தீவுகள்
    செயின்ட் கிட்ஸ் (ST. KITTS)
    நெவிஸ் (NEVIS)
    செயின் வின்சென்ட் (ST. VINSENT)
    கிரேனடைன்ஸ் (GRENADINES)

    ஜி 7 நாடுகளின் இராசதந்திரம் கருப்பு பணச் சலவையை ஒழிப்பதில் மிகவும் தீவிரமாக ஈடுபடுகின்றது.

    வங்கிகள் ஊடாக அல்லாமல் வேறு மார்க்கமாக பணம் அனுப்பும் வழி முறைகள் அவதானிக்கப்பட்டுள்ளன. ஒரு நாட்டில் பெற்ற ஊதியத்தையோ, பிற வருவாயையோ இன்னுமோர் நாட்டுக்கு அனுப்பும் பல்வேறு உத்திகளை சம்பந்தப்பட்டவர்கள் கைக்கொள்கின்றனர். பணச்சலவையின் பிறிதோர் வடிவமாக இவை கணிப்பிடப்படுகின்றன. மத்திய கிழக்கு, மற்றும் இந்திய உபகண்ட நாடுகளில் இவ்வகை பணக் கொடுக்கல் வாங்கல் ஹவாலா (HAWALA) என்று அழைக்கப்படுகிறது.

    Leave a Reply

    Spam Protection by WP-SpamFree

    Videos, Slideshows and Podcasts by Cincopa Wordpress Plugin